தலைமன்னார் கடற்பரப்பில் உள்ள மணல்மேடு ஒன்றில் அகதியாகத் தவித்துக் கொண்டிருந்த 5 குழந்தைகள் உட்பட 11 பேருக்கு இலங்கை கடற்படையினர் மனிதநேய அடிப்படையில் உதவி வழங்கியுள்ளனர்.
சனிக்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், முதற்கட்டமாக 4 பெண்கள், ஒரு ஆண் மற்றும் 2, 11, 14 வயதுடைய 3 குழந்தைகள் என மொத்தம் 8 பேரைக் கண்டறிந்தனர்.
அவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு மற்றும் தற்காலிக தங்குமிடம் உடனடியாக வழங்கப்பட்டது.
ஆரம்பக்கட்ட விசாரணையில், இவர்கள் இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து மனித கடத்தல்காரர்கள் மூலம் அழைத்து வரப்பட்டு, இந்த மணல்மேட்டில் கைவிடப்பட்டது தெரியவந்துள்ளது.
இவர்கள் தென்னிந்தியாவில் இருந்து திரும்பியவர்கள் என நம்பப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட அடுத்தகட்ட ரோந்துப் பணியில், அதே பகுதியில் மேலும் ஒரு தந்தையும் அவரது 11, 13 வயதுடைய இரு குழந்தைகளும் மீட்புக் குழுவினரால் கண்டறியப்பட்டனர்.
இதன் மூலம் ஒரே நாளில் 5 குழந்தைகள், 4 பெண்கள், 2 ஆண்கள் என மொத்தம் 11 பேர் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

