இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு மத்தியிலும், அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இஸ்ரேலுடன் ஒரு “இராஜதந்திர தீர்வை” எட்ட சிரியா தீவிரமாகச் செயற்பட்டு வருவதாகச் சிரிய வெளிவிவகார அமைச்சர் அசாத் அல்-ஷைபானி தெரிவித்துள்ளார்.
சிரியா எல்லைக்குள் இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து ஊடுருவி வரும் நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய வெளிவிவகார அமைச்சர் ஷைபானி,’ஜூலை மாதத்தில் மட்டும் 65 ஊடுருவல்களையும், ஆகஸ்ட் முதல் 18 நாட்களில் 52 ஊடுருவல்களையும் நாங்கள் அவதானித்துள்ளோம். குனைத்ரா மாகாணம் மற்றும் டமாஸ்கஸ் கிராமப்புற வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.
அத்துடன் இந்த ஆண்டில் இதுவரை 147 சிரியர்கள் கடத்தப்பட்டுள்ளனர், அதில் 49 பேர் இன்னமும் இஸ்ரேலின் காவலில் உள்ளனர்.
இருப்பினும், இந்த சவால்களுக்கு மத்தியிலும் இராஜதந்திர தீர்வுக்கான முயற்சிகளில் நாங்கள் உறுதியோடு இருக்கிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு சிரியாவை இராணுவமயமற்ற மண்டலமாக மாற்ற இஸ்ரேல் முனைந்து வரும் சூழலில், அமெரிக்கா முன்னெடுக்கும் இந்தப் பேச்சுவார்த்தைகள் பிராந்திய அமைதியை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

