முதலீடுகள் மற்றும் கைத்தொழிற்துறை சார்ந்த அரச நிறுவனங்களுக்கு இடையில் காணப்படும் நிர்வாக மற்றும் ஒழுங்குமுறை தடைகளை நீக்கி, அந்தச் செயற்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கத்துடன், ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேசிய வணிக வசதியளித்தல் மையம் (NBFC), கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, தொழில் அமைச்சர் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்க ஆகியோரின் தலைமையில் இன்று (22) முற்பகல் திறக்கப்பட்டது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் எண்ணக்கருவுக்கு அமைய, கைத்தொழிற்துறையில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த மையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், வர்த்தகமொன்றைத் தொடங்கும்போதும் அதனைப் பராமரிக்கும்போதும் அரச பொறிமுறையுடன் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கும், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதற்கும் இம்மையத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்படி, “ViYASA ” தேசிய வணிக வசதியளித்தல் மையம் (NBFC) கொழும்பு 07, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தை இலக்கம் C-80 கட்டடத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், அதன் தலைவராக ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சீவலி அருக்கொட செயற்படுகிறார்.
இதனுடன் இணைந்ததாக https://nbfc.presidentsoffice.gov.lk எனும் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது.

