சிரியாவின் குனெய்த்ரா (Quneitra) மற்றும் டெரா (Deraa) ஆகிய தெற்கு மாகாணங்களில் இஸ்ரேலியப் படைகள் அத்துமீறி நுழைந்து, பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சிரிய வெளிவிவகார அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேலியப் படைகளின் இந்த ஊடுருவல் மற்றும் குண்டுவீச்சு, அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
“இந்தத் தாக்குதல்கள் சிரியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை அப்பட்டமாக மீறும் செயலாகும்” என்று சிரியாவின் SANA செய்தி நிறுவனம் வாயிலாக விடுக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தொடர்ச்சியான இத்தாக்குதல்கள் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் முயற்சிகளைச் சிதைக்கின்றன. இது பொதுமக்களின் துயரத்தை அதிகரிப்பதோடு, பிராந்தியம் முழுவதும் பதற்றத்தையும் மோதலையும் தீவிரப்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது” என்றும் சிரிய அரசு எச்சரித்துள்ளது.
