எல்-நினோ நெருக்கடியைச் சமாளிக்க களமிறங்கியது விசேட குழு!

0
6

எல்-நினோ நிலைமையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழு, இரண்டாவது முறையாக நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தியின் தலைமையில் கூடிய இந்த விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழு, எதிர்கால எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடியது.

தற்போது உலக வானிலை அமைப்பின் கணிப்பின்படி, எல் நினோ நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு 81% ஆக உள்ளது என்றும், அதன்படி சமூக ரீதியாக நேரடியாகப் பாதிக்கப்படக்கூடிய விவசாயம், உணவுப் பாதுகாப்பு, பெருந்தோட்டத் துறை, நீர் முகாமைத்துவம் மற்றும் வலுசக்தி ஆகிய துறைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

இதன்படி, எல் நினோ நிலைமையை எதிர்கொள்வதற்காக ஒவ்வொரு துறைக்கும் உரிய அரச நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்டகால செயல்திட்டங்கள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

எல் நினோ நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், பாதிப்புக்குள்ளாகும் துறைகளுக்குத் தேவையான தீர்வுகளை வழங்குவது தொடர்பான முன்மொழிவுகள் குறித்தும் இங்கு மேலும் கவனம் செலுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here