பிரான்ஸ் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஜிரோண்ட் (Gironde) பிராந்தியத்தில், கட்டுப்பாடற்ற காட்டுத்தீ மிகவும் தீவிரமடைந்து வருகிறது.
“இந்தக் காட்டுத்தீ தன் இஷ்டத்திற்குப் பரவி வருகிறது; தீயணைப்பு வீரர்கள் இதுவரை சந்திக்காத ஒரு மிகக் கொடூரமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறார்கள்” என்று பிரான்ஸ் உள்துறை அமைச்சர் கவலை தெரிவித்துள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க பொர்டோ (Bordeaux) நகரின் எல்லைப் பகுதியிலிருந்து வெறும் 15 கிலோமீட்டர் தொலைவில் தீ எரிந்து கொண்டிருப்பதால், மக்கள் பெரும் அச்சத்திலும் பதற்றத்திலும் மூழ்கியுள்ளனர்.
புகை மூட்டம் காரணமாக பொர்டோவிற்குச் சுற்றுலா வந்த பல வெளிநாட்டுப் பயணிகள் தங்கள் பயணத்தைப் பாதியிலேயே கைவிட்டு வெளியேறி வருகின்றனர்.
“எங்கள் பகுதியைச் சுற்றிலும் புகை மண்டலமும் தீப்பிழம்புமாக ஒரு போர்க்களம் போலக் காட்சியளிக்கிறது” என்று அப்பகுதி பெண் ஒருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
தீயைக் கட்டுப்படுத்த விமானங்கள் மூலம் வேதிப்பொருட்கள் (retardant) தெளிக்கப்பட்டு வருகின்றன. பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளிலும் நிலவும் வரலாறு காணாத கடும் வெப்ப அலை, இக்காட்டுத்தீயை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, விளையாட்டு அரங்கங்கள் மற்றும் தற்காலிகப் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

