நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு, கொழும்பு ஐ.டி.எச் தொற்றுநோய் ஒழிப்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் டெங்கு அல்லாத பிற நோயாளர்களை முல்லேரியா வைத்தியசாலைக்கு உடனடியாக இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் டெங்கு நோயாளர்களுக்கு கூடுதல் நேரத்தையும், தீவிர கவனத்தையும் செலுத்தி சிகிச்சையளிப்பதற்காகவே இந்த அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை காலை சரை இலங்கையில் பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 67,143 ஆக உயர்ந்துள்ளதுடன், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 47 ஆக அதிகரித்துள்ளது இம்மாதத்தின் முதல் பத்து நாட்களுக்குள்ளேயே 11,764 புதிய நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
முன்னதாக ஜூன் மாதத்தில் மாத்திரம் அதிகபட்சமாக 21,538 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்

