நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 78,125 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நேற்று (21) ஒரே நாளில் 1,097 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகளின்படி, தற்போது நாடு முழுவதும் உள்ள 162 மருத்துவ அதிகாரிப் பிரிவுகள் அதிஅபாய வலயங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.
கடந்த சில மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான வளர்ச்சி காணப்படுவதுடன், மே மாதத்தில் 8,590 நோயாளர்களும், ஜூன் மாதத்தில் 21,535 நோயாளர்களும், ஜூலை மாதத்தில் கடந்த 21 நாட்களில் மட்டும் 22,749 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
இந்த ஆண்டில் டெங்கு நோய் காரணமாக 56 மரணங்கள் சம்பவித்துள்ளதுடன், நோயாளர்களின் இறப்பு விகிதம் 0.07% ஆகப் பதிவாகியுள்ளது.
மாகாண மட்டத்தில் அவதானிக்கும் போது, மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இது மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையில் 52.78% ஆகும் (41,236 நோயாளர்கள்).
தென் மாகாணத்தில் 11,950 நோயாளர்களும் (15.30%), மத்திய மாகாணத்தில் 6,603 நோயாளர்களும் (8.45%) பதிவாகியுள்ளனர்.

