கனடாவில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயின் அடர்ந்த புகை மூட்டம், தற்போது அமெரிக்க எல்லைகளுக்குள் வேகமாகப் பரவி வருகிறது.
கிரேட் லேக்ஸ் (Great Lakes) பிராந்தியத்தின் ஊடாக தென்கிழக்கு நோக்கி நகரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, பலத்த காற்று வீசி வருகிறது.
இந்தக் காற்றே நச்சுப் புகையையும் சாம்பல் துகள்களையும் அமெரிக்காவின் மேல் மத்திய மேற்கு (Upper Midwest) பகுதிக்குக் கொண்டு சேர்த்துள்ளது.
மறுபுறம், கனடிய பிரெய்ரிஸ் (Canadian Prairies) மற்றும் வடக்கு சமவெளிப் பகுதிகளில் நிலவும் உயர் காற்றழுத்த மண்டலம் காரணமாக, அங்கு வறட்சியான மற்றும் கடுமையான வெப்ப காலநிலை நீடிக்கிறது.
இந்த உலர்வான வானிலையே காட்டுத்தீ தொடர்ந்து கட்டுக்கடங்காமல் எரிவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய திகதிகளில் வடகிழக்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் கிரேட் லேக்ஸ் பகுதியில் உள்ள மோசமான நச்சுப் புகை துகள்கள் படிப்படியாக விலகி, தென்கிழக்கு கனடா நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.
கனடா அரசாங்கத்தின் வானிலை சேவை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, சனிக்கிழமை இறுதியளவில் நியூ இங்கிலாந்து பகுதியின் வான்பரப்பில் புகை மூட்டம் குறைந்து, காற்றின் தரம் கணிசமாக முன்னேற்றமடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

