இலங்கையில் வாகனச் சாரதிகள் இனி தங்களின் மோட்டார் காப்புறுதிச் சான்றிதழைப் பிரதியாகக் கையோடு கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை என பொலிஸார் நினைவூட்டியுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவின் தகவல்படி, டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டைகள் செல்லுபடியாகும் ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
தனியார் காப்புறுதி நிறுவனங்களில் காப்புறுதி செய்துள்ளவர்கள், தங்களின் நிறுவனத்தின் மொபைல் செயலி, QR குறியீடு அல்லது இணையதள இணைப்பு மூலம் இந்த டிஜிட்டல் அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்.
அதேபோல், விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபையின் ஊடான காப்புறுதிகளுக்கும் இந்த டிஜிட்டல் அட்டை வசதி வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸார் அல்லது அதிகாரம் பெற்ற அதிகாரிகள் பரிசோதிக்கும் போது, வாகனச் சாரதிகள் தங்களது மொபைல் போனில் உள்ள டிஜிட்டல் அட்டையைக் காண்பிக்க முடியும்.
அதிகாரிகள் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமோ அல்லது தேசிய காப்புறுதி சரிபார்ப்பு முறைமையின் மூலமோ அதன் செல்லுபடியாகும் தன்மையை உறுதிசெய்வர்.
மேலும், பொதுமக்கள் *1338# மற்றும் *1918# ஆகிய USSD சேவைகளைப் பயன்படுத்தித் தங்களது காப்புறுதியின் தற்போதைய நிலையைத் தாங்களே சரிபார்த்துக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், அச்சிடப்பட்ட காகிதச் சான்றிதழ் தேவைப்படும் சாரதிகள், அதனைத் தங்கள் காப்புறுதி நிறுவனங்களிடமிருந்து தொடர்ந்து பெற்றுக் கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

