ஈரானின் தெற்குப் பகுதியிலுள்ள சீரிக் நகரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றின் மீது செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஏவுகணை, அமெரிக்கப் பாதுகாப்பு உபகரணத் தயாரிப்பு நிறுவனமான ‘ரேத்தியான்’ உருவாக்கியது என ஈரான் நீதித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹோர்மொஸ்கான் மாகாணத்தின் தலைமை நீதிபதி முஜ்தபா கஹ்ரமானி இது குறித்துப் பேசுகையில், சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஏவுகணையின் பாகங்களிலிருந்த அடையாளக் குறியீட்டை ஆய்வு செய்தபோது, அது ரேத்தியான் நிறுவனத்திற்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட எண் என்பது அமெரிக்கத் தரவுத்தளத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்கா தீவிர விசாரணை நடத்தி வருவதாக அமெரிக்கத் துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
அதேவேளையில், ஈரானிய அதிகாரியின் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ரேத்தியான் நிறுவனம் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை.

