இந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும், வெளிநாட்டுச் தொடர்களுக்குச் சிறந்த முறையில் தயாராகவும், அடுத்த ‘எதிர்கால சுற்றுப்பயணத் திட்டத்தில்’ முக்கிய மாற்றங்களைச் செய்ய இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) தீர்மானித்துள்ளது.
குறிப்பாக, SENA நாடுகளான தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன், இந்திய வீரர்கள் அந்த நாட்டு சூழலுக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்ள போதிய காலஅவகாசமும், பயிற்சிப் போட்டிகளும் சேர்க்கப்படும்.
இது குறித்துப் பேசிய BCCI செயலாளர் தேவஜித் சாய்கியா, வீரர்களுக்குத் தேவையான ஓய்வு மற்றும் வெளிநாட்டுத் தொடர்களுக்கான முன்னேற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், துபாயில் நடைபெறவுள்ள சர்வதேசக் கூட்டத்தில் இது விவாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், இருதரப்புத் தொடர்களின் மீதான சுவாரஸ்யம் குறைந்து வருவதால், மீண்டும் மூன்று அல்லது நான்கு நாடுகள் பங்கேற்கும் ‘முத்தரப்பு தொடர்களை’ அதிகளவில் நடத்தப் பல கிரிக்கெட் வாரியங்கள் திட்டமிட்டு வருகின்றன.

