போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு எந்தவித இரக்கமும் காட்ட அரசாங்கம் தயாராக இல்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாலைக்கு இன்று விஜயம் செய்த அமைச்சர், சிறைச்சாலை அவசரநிலைகளை எதிர்கொள்வதற்கான ஒருங்கிணைந்த பொறிமுறை மற்றும் கைதிகளின் நலன்புரி நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தார்.
வழக்குகளின் தாமதத்தைத் தவிர்க்க ஒகஸ்ட் மாதத்தில் மட்டும் 9,081 அரசாங்க பகுப்பாய்வாளர் அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் மஹர சிறைக் கைதிகள் தொடர்பான 500 அறிக்கைகளும் அடங்குவதாகவும் அவர் கூறினார்.
அங்கு கைதிகள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர், ‘விடுதலையாகிச் சென்ற பின் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபடாதீர்கள். நல்ல மனிதர்களாக வாழ முயலுங்கள். ஆனால் போதைப்பொருள் விநியோகிப்பவர்களுக்கு எந்த மன்னிப்பும் வழங்கப்பட மாட்டாது’ என எச்சரித்தார்.
சமீபத்தில் தீப்பிடித்துச் சேதமடைந்த மஹர சிறைச்சாலையின் பகுதிகளைப் பார்வையிட்ட அமைச்சர், கைதிகள் நாட்டின் வேலைப்படையின் ஒரு பகுதி என்பதால், நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் பங்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

