மாமாங்கேஸ்வரர் ஆலய “தேர்” திருவிழா விண்ணைப் பிளந்த பல்லாயிரக்கணக்கானபக்தர்களின் அரோகரா கோஷம்!

0
2

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமான மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திராவிட முகப்புத்திர சிற்பத் தேர் உற்சவம், இன்று (11) செவ்வாய்க்கிழமை காலை 6.50 மணியளவில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.

​ஆலயத்தில் இடம்பெற்ற விசேட கிரியை வழிபாடுகளைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ‘அரோகரா’ கோஷத்திற்கு மத்தியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி மாமாங்கேஸ்வரர் அருள்பாலித்தார்.
​மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பெருமைகளையும் ஒருங்கே கொண்ட இவ்வாலயத்தின் மஹோற்சவமானது கடந்த 3ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

​இன்று காலை விநாயகர் மற்றும் கொடித்தம்பத்திற்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டு, பஞ்சமுக விநாயகருக்கு வசந்த மண்டபத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து சுவாமி வீதியுலா சிறப்பாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து வெளிவீதியில் பஞ்சமுக விநாயகர் தேரில் ஆரோகணிக்க, அங்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான பெண் மற்றும் ஆண் பக்தர்கள் வடமிழுக்கத் தேர் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
​ஸ்ரீ ராமபிரானால் வழிபடப்பட்ட ஆலயம் என்ற பெருமையினையும், பிதுர்க்கடன் தீர்க்கும் புனிதத் தீர்த்தக் கேணியைக் கொண்ட தலமென்ற புகழினையும் உடையதாக இம்மாமாங்கேஸ்வரர் ஆலயம் விளங்கி வருகின்றது.

​இவ்வாலயத்தின் ஆடி அமாவாசைத் தீர்த்தோற்சவம் நாளை (12) நண்பகல் வரலாற்றுச் சிறப்புமிக்க மாமாங்கேஸ்வரர் தீர்த்தக் கேணியில் நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here