கடந்த காலங்களில் நாட்டில் விளையாட்டு மைதானங்களையோ அல்லது வீடற்ற மக்களுக்கு வீடுகளையோ முறையாக அமைத்துக் கொடுப்பதற்கு பதிலாக, போதைப்பொருள் புழக்கம், ஊழல் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் நடவடிக்கைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு அவை வளர்ச்சியடைந்ததாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு கிராமங்களிலும் உள்ள இளைஞர்கள் மற்றும் சிறு குழந்தைகள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வரும் சோகமான சூழ்நிலை நிலவுவதாக சுட்டிக்காட்டிய அவர், முறையான தொலைநோக்குத் திட்டங்கள் இல்லாததால் நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்து வங்கரோத்து நிலையை அடைந்ததாகக் குறிப்பிட்டார்.
வெறும் வீதிகளை அமைப்பதன் மூலம் மட்டும் இளைஞர்களை போதைப்பொருள் பிடியிலிருந்து மீட்க முடியாது எனவும், விளையாட்டு மற்றும் கலாச்சாரத் துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடுகளை வழங்கி, இளைஞர்களுக்கு நல்வழி காட்ட அரசாங்கம் புதிய திட்டங்களை வகுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
கடந்த காலத்தில் விளையாட்டுத் துறையை சரியாக மேம்படுத்தாததன் விளைவாக, இன்று விளையாட்டு மைதானங்களை பராமரிப்பதை விட சிறைச்சாலைகளை பராமரிக்கவும், புதிய சிறை முகாம்களை அமைக்கவுமே அரசாங்கத்திற்கு அதிக நிதி செலவாகி வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எனினும், நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலையும் பாதாள உலகக் குழுக்களையும் ஒழித்து சட்டத்தின் ஆட்சியை பலப்படுத்த அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
முன்னர் “சட்டம் என்பது ஏழை மக்களுக்கு மட்டுமே; செல்வந்தர்களும் அதிகார வர்க்கத்தினரும் தப்பித்துவிடுவார்கள்” என்ற நிலைமையே நாட்டில் நிலவியது.
ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளதுடன், குற்றங்களில் ஈடுபட்ட பலமிக்கவர்கள், கோடீஸ்வரர்கள் மற்றும் சூழ்ச்சியாளர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு செல்வாக்குமிக்கவர்கள் சிறைக்குச் செல்லத் தொடங்கியுள்ளதால், சிறைச்சாலைகளுக்குள் இருந்தவாறே சாதாரண கைதிகளையும் தூண்டிவிட்டு அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு சூழ்ச்சிகளை முன்னெடுக்க முயற்சிக்கின்றனர்.
இவ்வாறான சதிகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் தலைவணங்காது எனவும், போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒழிக்க முழு நாடும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன வலியுறுத்தினார்.

