காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்கள் இன்று (10) காலை வான்பாயும் மட்டத்தை எட்டியுள்ளதாக அந்நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாகவே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், எந்த நேரத்திலும் வான் கதவுகள் திறக்கப்படும் சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன. இதனால் மஸ்கெலியா ஓயா ஆற்றின் இருமருங்கிலும் வசிக்கும் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், மின் உற்பத்தி நிலையங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 24 மணிநேரத்தில் காசல்ரீ நீர்த்தேக்கப் பகுதியில் 25 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், அந்நீர்த்தேக்கம் வான்பாயும் மட்டத்திற்கு 1.2 அடி வரை எட்டியுள்ளது.
அதேவேளை, மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கப் பகுதியில் 29 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், அந்நீர்த்தேக்கம் வான்பாயும் மட்டத்திற்கு 3.4 அடி வரை எட்டியுள்ளதாக நீர்த்தேக்கப் பொறுப்பதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

