நாட்டிலுள்ள 33 சிறைச்சாலைகள் அனைத்திற்கும் ஸ்கேனர் (Scanner) இயந்திரங்களை வழங்குவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
இந்த ஸ்கேனர் இயந்திரங்களைப் பொருத்துவதன் மூலம், தற்போது முன்னெடுக்கப்படும் உடற்பரிசோதனைகளை நவீன தொழில்நுட்ப முறையில் மேற்கொள்ள முடியும் என்றும், இதன் மூலம் சிறைச்சாலை அதிகாரிகள் மீது சுமத்தப்படும் தேவையற்ற குற்றச்சாட்டுகள் தவிர்க்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இந்த இயந்திரங்கள் சிறைச்சாலைகளில் நிறுவப்பட்டதன் பின்னர், கைதிகளுக்குக் கொண்டு வரப்படும் உணவு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் ஸ்கேனர் இயந்திரங்கள் மூலமாகப் பரிசோதிக்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படும்.
மேலும், சிறைச்சாலைச் சுவர்களுக்கு வெளியே இருந்து உள்ளே எறியப்படும் சட்டவிரோதப் பொதிகளைத் தடுப்பதற்கு, சிறைச்சாலை நிர்வாகத்துடன் இணைந்து புதிய பாதுகாப்புத் திட்டத்தை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

