இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கிலும் சர்வதேச கலாச்சார உறவை வலுப்படுத்தும் வகையிலும் கொழும்பு காலி முகத்திடலில் சர்வதேச பட்டத் திருவிழா மிகக் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.

சுற்றுலாத்துறை அபிவிருத்தி பணியகம், இலங்கை பொலிஸ் மற்றும் கொழும்பு மாநகரசபை ஆகிய நிறுவனங்களின் கூட்டு ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பார்வையாளர்கள் ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டனர்.

30 நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 சர்வதேச பட்டக் கலைஞர்களும், 1,500 க்கும் மேற்பட்ட இலங்கை பட்டக் கலைஞர்களும் இதில் பங்கேற்றுத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியதில் கொழும்பு வான்வெளி பல்வேறு வடிவங்கள் மற்றும் வண்ணங்களைக் கொண்ட பட்டங்களால் காட்சியளித்தது.

இம்முறை திருவிழாவிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹர முக்கிய பண்பாட்டுத் தீமாக அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் தொடக்கமாக சுமார் 200 பழைய மற்றும் அரிதான ரக வாகனங்கள் பங்கேற்ற விசேட பேரணி கொழும்பின் முக்கிய வீதிகள் வழியே போர்ட் சிட்டி வரை நடைபெற்றது. அத்துடன் ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் நிபுணர்களைக் கொண்டு 600 க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்குப் பட்டம் செய்யும் கலை மற்றும் பறக்கவிடும் பயிற்சிகளும் முன்னதாக அளிக்கப்பட்டிருந்தன.

பகல் நேரத்தில் நடைபெற்ற பிரதான பட்டப் போட்டிகளைத் தொடர்ந்து, இலங்க வரலாற்றிலேயே முதன்முறையாக ஒளிரும் வண்ண விளக்குகளுடன் கூடிய இரவுக் காலப் பட்டத் திருவிழாவும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முன்னணி இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் மற்றும் சர்வதேச உணவுத் திருவிழாவும் நடைபெற்று நிகழ்வு நிறைவுற்றது.


