இரத்மலானையில் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்: தப்பியோடிய சந்தேகநபர்களைத் தேடி பொலிஸார் தீவிர விசாரணை

0
2

கொழும்பு – இரத்மலானை, ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள குடியிருப்பு வீடு ஒன்றைக் குறிவைத்து இன்றைய தினம் (5) அதிகாலை வேளையில், அடையாளம் தெரியாத நபர்களால் கைக்குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

குறித்த வீட்டை இலக்காகக் கொண்டு இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டதாகவும், அவற்றில் ஒன்று வீட்டின் முற்றத்தில் விழுந்து வெடித்துள்ள நிலையில், மற்றைய கைக்குண்டு வெடிக்காமல் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தாக்குதலின் போது அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்றபோதிலும், குண்டு வெடித்ததில் வீட்டின் வெளிப்புறப் பகுதி மற்றும் சொத்துக்களுக்கு பகுதி அளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் தகவலறிந்த உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர், வெடிக்காத நிலையில் காணப்பட்ட மற்றைய கைக்குண்டை பாதுகாப்பாக மீட்டு செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இத்தாக்குதலுக்கான பின்னணி மற்றும் காரணம் இதுவரை உறுதியாகத் தெரியவராத நிலையில், தனிப்பட்ட பகை, பாதாள உலகக் குழுக்களின் அச்சுறுத்தல் அல்லது கப்பம் கோரும் நடவடிக்கையா என்ற பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முடக்கிவிட்டுள்ளனர்.


மேலும், சம்பவ இடத்தில் உள்ள CCTV காணொளிகளை ஆய்வு செய்துவரும் பொலிஸார், தாக்குதலை நடத்திவிட்டு தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுக்களை நியமித்து தீவிர தேடுதல் வேட்டையை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here