இலங்கைக்கும் தென்கொரியாவிற்கும் இடையிலான கலாச்சார, கல்வி மற்றும் நட்புறவுச் சங்கிலியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பிரமாண்டமான ‘2026 இயுலிம்’ (Eoullim) கொரிய கலாச்சார உச்சிமாநாடு மற்றும் கலைத் திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு பிஷப் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

தென்கொரியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான ஃபார் ஈஸ்ட் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கையின் IDM நேஷன்ஸ் கேம்பஸ் இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்விற்கு, கொரிய சர்வதேச கலாச்சார பரிமாற்ற அறக்கட்டளை (KOFICE) மற்றும் தென்கொரிய கலாச்சார, விளையாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சகம் ஆகியன உத்தியோகபூர்வ அனுசரணை வழங்குகின்றன.

இது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஃபார் ஈஸ்ட் பல்கலைக்கழகத்தின் நாடக மற்றும் நடிப்புத் துறைத் தலைவர் பேராசிரியர் கியுங்-இயூன், இலங்கை மாணவர்களின் எதிர்காலத்தை வளம்படுத்தும் புதிய ‘1+3’ கல்வித் திட்டத்தின் முக்கிய அம்சங்களை வெளியிட்டார்.

இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் தமது முதலாம் ஆண்டு கல்வியை இலங்கையிலேயே பயின்று, எஞ்சிய 3 ஆண்டுகளைத் தென்கொரியாவில் தொடரக்கூடிய அற்புதமான வாய்ப்பு வழங்கப்படுகிறது.
மேலும், பிற நாடுகளுக்கு உயர்கல்விக்காகச் செல்லும்போது வங்கிக் கணக்கில் பெரும்தொகையைக் காட்ட வேண்டிய சுமை (Show Money) இதில் கிடையாது என்பதால், சாதாரண மற்றும் நடுத்தர குடும்பப் பின்னணியைக் கொண்ட மாணவர்களும் இலகுவாகக் கொரியாவில் உயர்கல்வியைத் தொடர முடியும்.

அத்துடன் கொரிய கலாச்சாரம் மற்றும் மொழியைக் கற்றுக்கொள்வதன் மூலம், படிப்பை முடித்தவுடன் முன்னணி கொரிய நிறுவனங்களில் நேரடி தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும் சூழலும் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 29ஆம் திகதி நாள் முழுவதும் நடைபெறும் இத்திருவிழாவில், காலையில் கொரிய கலாச்சாரம் மற்றும் கல்வி உறவுகள் குறித்த சாஸ்திரீய கருத்தரங்குகளும், மதிய வேளையில் கொரிய உணவுகள், அழகுசாதனப் பொருட்கள், தாய்வாண்டோ தற்காப்புக் கலை மற்றும் K-pop சார்ந்த நேரடி அனுபவப் பகிர்வுகளும் இடம்பெறவுள்ளன.

மாலை அமர்வில் கொரிய பாரம்பரிய நடனங்கள், இசை நிகழ்ச்சிகள், தாய்வாண்டோ சாகசங்கள் மற்றும் K-pop நடனக் குழுவினரின் பிரமாண்டமான கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
IDM நேஷன்ஸ் கேம்பஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி வி. ஜனகன், கலாநிதி லயனல் பின்டோ, பேராசிரியர் பிரசாத் ஹேரத், மேஜர் ஜெனரல் சஜித் லியனகே மற்றும் தென்கொரிய தூதுக்குழுவினர் கலந்துகொண்ட இந்த ஊடகச் சந்திப்பில், இலங்கை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இக்கலாச்சார அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


