சவூதி அரேபியாவின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட சேதவிவரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.
எனினும், 2019ஆம் ஆண்டிற்குப் பின்னர் சவூதியின் கிழக்குப் பகுதியிலிருந்து செங்கடலில் உள்ள ‘யான்பு’ (Yanbu) துறைமுகத்திற்கு கச்சா எண்ணெயைக் கொண்டு செல்லும் 1,200 கிலோமீற்றர் நீளமான ‘பெட்ரோலைன்’ (Petroline) குழாய் வழியைக் இலக்கு வைத்து ஹூதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது இதுவே முதன்முறையாகும்.
ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக, இப் பாதை வழியான எண்ணெய் விநியோகம் நாளொன்றுக்கு 5 மில்லியன் பேரல்கள் வரை அதிகரிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் உரிமை தமக்கு உள்ளதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, யேமனின் அல்-ஹுதைதா (Hodeidah) துறைமுகம், காமரான் (Kamaran) தீவு மற்றும் சனா சர்வதேச விமானநிலையம் என்பவற்றை இலக்கு வைத்து சவூதி படைகள் தாக்குதல் நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, சவூதி நடத்தும் தாக்குதல்கள் யேமனின் சிவில் உள்கட்டமைப்புகளையே பாதிப்பதாகவும், தமது இராணுவ வலிமையில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் ஹூதிகள் தெரிவித்துள்ளனர்

