நீதிபதிகளின் சேவைக்காலம் நீடிப்பு, அரசியலமைப்பு திருத்தம் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பில் அரசுக்கு திஸ்ஸ அத்தநாயக்க கடும் கண்டனம்!

0
9

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தொடர்பான தவறான கருத்துக்கள், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் முயற்சி, நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் செயல்பாடுகளை ஐக்கிய மக்கள் சக்தி கடுமையாக விமர்சித்துள்ளது.

எதுல்கோட்டேயிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த கருத்துக்களை முன்வைத்தார்.

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சேவைக்காலத்தை நீடிப்பது தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் எதிர்ப்பு வெளியிட்டமை, ஐக்கிய மக்கள் சக்தியிடமிருந்து ஏதேனும் சலுகைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன் பாராளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி தெரிவித்த கூற்றை தாம் முற்றிலும் நிராகரிப்பதாக அவர் தெரிவித்தார்.

இக்கூற்று சட்டத்தரணிகள் சங்கத்திற்கு இழைக்கப்பட்ட கடுமையான அவமதிப்பாகும் என்றும், அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள் மீது சேறு பூசுவதை விடுத்து, அவர்களின் நியாயமான சுட்டிக்காட்டல்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் எவ்வித அரசியல் கொடுக்கல் வாங்கல்களும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தொடர்ந்து முயற்சித்து வருவதாக சுட்டிக்காட்டிய அவர், நிலுவையிலுள்ள வழக்குகளை விரைவுபடுத்தவே இந்நடவடிக்கை என அரசாங்கம் கூறுவது பலவீனமான தர்க்கமாகும் என்றார்.

வழக்குகள் தேங்கிக்கிடப்பின், அதனை திறம்பட கையாள்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்க முடியும் என்றும், அதற்கு எதிர்க்கட்சியும் ஆதரவளிக்கத் தயார் என்றும் தெரிவித்தார். ஆனால், தனிநபர்களை மையமாகக் கொண்ட அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் முயலுமாயின், அதற்கு எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பை வெளியிடும் என்றும், இவ்வாறான திருத்தங்களுக்கு மக்கள் தீர்ப்பு காணப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தற்போது உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் 8 நீதிபதி வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், அவற்றை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்காமல், குறுக்கு வழியில் தமக்குத் தேவையானவாறு அரசியலமைப்பை திருத்த அரசாங்கம் முயல்வது தவறான முன்னுதாரணம் என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், நாட்டில் உள்ள 7 ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா விடுதிகளாக மாற்றுவதாக அரசாங்கம் கூறிய போதிலும், 2025 ஆம் ஆண்டில் அவற்றின் பராமரிப்பிற்காக 33 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தணிக்கை அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அம்மாளிகைகளில் தங்கியிருக்காத போதிலும், 3089 பேர் அம்மாளிகைகளைப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரியவருகிறது என்றும், ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்ட மாளிகைகளை வெளிநபர்கள் பயன்படுத்துவது நிதி முறைகேடாகும் என்றும் குற்றம் சாட்டினார்.
அதேபோல், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலாத் துறைக்காகப் பயன்படுத்த தீர்மானித்தபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தற்போதைய அரசாங்கக் கட்சியினர், இன்று அதே நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா விடுதியாக மாற்றத் தயாராகி வருவது மக்களை ஏமாற்றும் செயலாகும் என்றும் அவர் விமர்சித்தார்.

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்துப் பேசிய அவர், நாட்டின் தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளதாக அரசாங்கம் பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்கிறது என்றார். நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி 5 சதவீதமாக உள்ள நிலையில், இது பொருளாதார வளர்ச்சியல்ல, வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்புவதே ஆகும் என விளக்கிய அவர், 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட அறிக்கையின்படி திறைசேரி நிரம்பி வழிவதாகக் கூறும் அரசாங்கம், அன்றாடச் செலவுகளுக்காக மேலும் 7 டிரில்லியன் ரூபா கடன் பெற எதிர்பார்ப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

மக்கள் வறுமை காரணமாகவே தங்க நகைகளை அடகு வைக்கின்றனர் என்றும், கடந்த மாதத்தில் மட்டும் 35,145 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகள் அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இறுதியாக, தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறினாலும், தெவிநுவர பெரஹரா நிகழ்வில் பாதாள உலகக் குழுவினரின் அச்சுறுத்தல் காரணமாக நடன நிகழ்வொன்று நிறுத்தப்பட்டமை தேசிய பாதுகாப்பின் பலவீனத்தையே காட்டுகிறது என்றார்.

எனவே, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், மாகாண சபை தேர்தலை பழைய முறையில் உடனடியாக நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here