கொழும்பு ஸ்ரீ மகா அகோர வீர பத்திரகாளியம்பாள் தேவஸ்தான 19ஆம் ஆண்டு வருஷாபிஷேகப் பெருவிழா: பால்குடப் பவனி! Video

0
21

கொழும்பு 08, பேஸ்லைன் வீதி, சாஸ்புர பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகா அகோர வீர பத்திரகாளியம்பாள் தேவஸ்தானத்தின் 19ஆம் ஆண்டு வருஷாபிஷேக மகோற்சவம் பக்தி பூர்வமாகத் தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இத்திருவிழாவிற்கான பூர்வாங்க வழிபாடுகள் கடந்த 2026-07-04 அன்று மாலை 6.00 மணிக்கு கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, கிராம சாந்தி மற்றும் பிரவேச பலி பூஜைகளுடன் தொடங்கின. அதனைத் தொடர்ந்து, கடந்த 05-07-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு கணபதி ஹோமம், அங்குரார்ப்பணம் மற்றும் ரக்ஷாபந்தன பூஜைகளுடன் தேவஸ்தானத்தில் சிம்மக் கொடியேற்றம் மிக விமரிசையாக நடைபெற்றது.

அம்பாளின் அருளைப் பெற வேண்டி, தொடர்ந்து கடந்த 17-07-2026 அன்று மாலை 5.00 மணிக்கு கணபதி ஹோமம், லக்ஷ்மி சூக்தம், 108 சங்காபிஷேகம், மஹா பூர்ணாகுதி மற்றும் சிறப்பு அலங்கார பூஜைகளும் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டன.

மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பால்குடத் திருவிழா (19-07-2026) ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பமாகி பக்திப் பரவசத்துடன் இனிதே நடைபெற்றது.

புனித யானைகள் கலசமேந்திவர 15 பறவைக்காவடி மற்றும் தூக்குக் காவடிகள் ஆடியவண்ணம் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் ஏந்தி வந்து காளி அம்பாளுக்குத் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

தொடர்ந்து அம்பாளுக்கு விசேஷ அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்று, வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும் மதிய அன்னதானமும் இனிதாக வழங்கப்பட்டது.

 

ஆலய நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளபடி, திருவிழாவின் அடுத்தடுத்த முக்கிய வழிபாடுகளாக (20-07-2026) திங்கட்கிழமை மஹா வசந்தமண்டப பூஜை நடைபெற்று, அதனைத் தொடர்ந்து சர்வ அலங்கார பூஷிதையாக ஸ்ரீ காளியம்பாள் பக்தர்களுக்கு அருளாசி வழங்குவதற்காகத் திருத்தேரில் ஏறி சாஸ்புர வெளி வீதியுலா வரவிருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து, எதிர்வரும் 21-07-2026 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிக்கு கடல் மாதாவும் களனி நதிக்கரையும் சங்கமிக்கும் புனித இடமான முகத்துவாரம் டிலாசால் கடற்கரையில் தீர்த்தமாடி அம்பாள் மீண்டும் ஆலயம் எழுந்தருளுவார்.

நிறைவாக, வருகிற 25-07-2026 சனிக்கிழமை மாலை 8.00 மணிக்கு மஹா அன்ன முனீஸ்வரர் வீதி உலாவும், அதனைத் தொடர்ந்து சிறப்பு அன்னதான நிகழ்வும் நடைபெறவுள்ளது.

இவ்விழா ஏற்பாடுகள் அனைத்தும் ஆலய பரிபாலன சபையினர் சார்பில், சித்தர் பீட இளவரசன் “சஹன் விராஜ் சாமியின்” தலைமையில் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு நன்முறையில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அனைத்துப் பகுதி ஆன்மீக அன்பர்களும் அன்னை ஸ்ரீ மகா அகோர வீர பத்திரகாளியம்பாளின் திருவருளைப் பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here