லங்கா பிரீமியர் லீக் (LPL) 2026 கிரிக்கெட் தொடரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போட்டிகளின் முடிவுகளை மாற்றுவதற்காக 30,000 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகையை லஞ்சமாக வழங்க முயன்ற குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம் கிங்ஸ் (Jaffna Kings) அணியின் இணை உரிமையாளர் மன்ஜோத் கல்ரா (Manjot Kalra) மற்றும் மற்றொரு சந்தேக நபர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று முன்னிலைபடுத்தப்பட்ட போது, விளையாட்டு ஊழல் விசாரணைப் பிரிவு அதிகாரிகள் இந்த அதிர்ச்சி விபரங்களை நீதிமன்றத்தில் அம்பலப்படுத்தியுள்ளனர்.
மன்ஜோத் கல்ரா, இலங்கை அணியின் முன்னணி வீரர்களான பானுக ராஜபக்ச, துனித் வெல்லாலகே மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோரைத் தொடர்பு கொண்டு போட்டிகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றியமைக்கப் பேரம் பேசியுள்ளார்.
இந்த லஞ்ச விவகாரத்திற்கு உடன்படாத இலங்கை வீரர்கள், உடனடியாக இது குறித்து விளையாட்டு ஊழல் விசாரணைப் பிரிவுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
விசாரணை அதிகாரிகளின் வழிகாட்டுதலின் கீழ், வீரர்கள் தொடர்ந்து அவருடன் பேசுவது போல் நடித்துள்ளனர்.
இறுதியில் 11.5 மில்லியன் ரூபாய் லஞ்சப் பணத்திற்குப் பேரம் பேசப்பட்டு, அதில் 9.5 மில்லியன் ரூபாயை முற்பணமாக (Advance) வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பில் திட்டமிடப்பட்ட ஒரு இடத்திற்கு கறுப்புப் பை ஒன்றில் 9.5 மில்லியன் ரூபாய் ரொக்கப் பணத்துடன் வந்த இரண்டாவது சந்தேக நபரையும், மன்ஜோத் கல்ராவையும் மறைந்திருந்த அதிகாரிகள் கச்சிதமாகக் கைது செய்தனர்.
இது தொடர்பான தொலைபேசி உரையாடல்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களும் நீதிமன்றத்தில் முத்திரையிடப்பட்ட கோப்பாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்ததுடன், இவர்கள் கிரிக்கெட்டை ஊக்குவிக்கவே இலங்கை வந்ததாகவும், பிணை வழங்குமாறும் கோரினர்.
எனினும், இவர்களுக்கு பிணை வழங்கினால் அது தற்போதைய விசாரணைக்கு முட்டுக்கட்டையாக அமையும் எனக் கூறி, சந்தேக நபர்கள் இருவரையும் வரும்
ஜூலை 31 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

