களனி கங்கை கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

0
13

களனி கங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையால், அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ருவன்வெல்ல, சீதாவக்க, தொம்பே, தெஹிஓவிட்ட, எஹலியகொட, எட்டியாந்தோட்டை மற்றும் புலத்கொஹுபிட்டிய பகுதிகளை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளநிலை உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

களனி கங்கையின் மேல் நீரேந்து பகுதிகளில் தற்போது 300 மில்லிமீற்றருக்கு அண்மையான அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நிலவும் மழை நிலவரம் மற்றும் களனி கங்கையில் நிறுவப்பட்டுள்ள நீர்மட்ட அளவீட்டு கருவிகளின் தரவுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், அடுத்த 24 மணித்தியாலங்களில் இவ்வெள்ள அபாயம் உருவாகும் சாத்தியம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள், வீதிகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here