16 வயதைத் தாண்டும் மாணவர்கள் பாடசாலை கல்வியை பாதியில் கைவிடும் அபாயம்!

0
2

16 வயதைத் தாண்டிய மாணவர்கள், குறிப்பாக ஆண் பிள்ளைகள், பாடசாலைக் கல்வியை முழுமையாக நிறைவு செய்யாமல் பாதியிலேயே விலகும் போக்கு அதிகரித்து வருவதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய கவலை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது உரையாற்றிய அவர், 16 வயது வரையிலான கட்டாயக் கல்வி சட்டத்தின் மூலம் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், 16 வயதிற்குப் பிறகு மாணவர்கள் கல்வியைத் தொடர்வதில் சரிவு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

13 ஆண்டுகால முழுமையான பாடசாலை படிப்பை முடிக்காமல் வெளியேறும் பிள்ளைகள், சமுதாயத்தில் பல்வேறு ஆபத்துகளையும் பாதிப்புகளையும் எதிர்கொள்ள நேரிடும் எனப் பிரதமர் எச்சரித்தார்.

போதிய திறன்களும் தகுதிகளும் இன்றி வெளியேறும் மாணவர்கள், சுரண்டல்களுக்கும், தீய வழிகாட்டல்களுக்கும், சட்டவிரோதச் செயல்களுக்கும் மிக இலகுவாக ஆளாகக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சவால்களைக் கருத்திற் கொண்டே, 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்விச் சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கமாகத் மாணவர்கள் முழுமையாக 13 ஆண்டுகள் பாடசாலைக் அமைப்பிற்குள் தங்கியிருப்பதை உறுதிசெய்வது அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மாணவர்கள் கல்வியைத் தொடர்ந்து முன்னெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் பாதுகாப்பான, ஆதரவான மற்றும் சாதகமான கற்றல் சூழலை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கமைய, புதிய முதலாம் ஆண்டுக்கான பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 2027 ஆம் ஆண்டில் 2 ஆம் மற்றும் 6 ஆம் ஆண்டுகளுக்கான புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here