வட மாகாண பனை வடிசாலைகள் எதிர்நோக்கும் வரி மற்றும் கட்டண அதிகரிப்பு தொடர்பாக யாழ் மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் வேண்டுகோளுக்கிணங்க பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் ஏற்பாட்டில் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த், கடற்தொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆகியோரின் பங்குபற்றலுடன் விசேட கலந்துரையாடலொன்று பாராளுமன்ற வளாக கேட்போர் கூடத்தில் இன்று (07/10/2026) நடைபெற்றது.
நிதி அமைச்சின் அதிகாரிகள், சுங்கவரி திணைக்கள அதிகாரிகள் மற்றும் குறிப்பிட்ட சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த கலந்துரையாடலில் வடிசாலைகள் மீது சுமத்தப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்களின் அதிகரிப்பு பொருத்தமற்றது என்றும் பனை கைத்தொழில் வளர்ச்சிக்கு மென்மேலும் அரசு என்ற ரீதியில் தேவையான சலுகைகளை வழங்கும் என்றும் அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் தெரிவித்தார்.
வட மாகாண வாழ்வியலுடன் பிண்ணிப்பிணைந்துள்ள பனை கைத்தொழில் வளர்ச்சிக்கும் மக்களின் நலன் கருதியும் குறிப்பிட்ட வரி மற்றும் கட்டண அதிகரிப்பு தொடர்பான வேண்டுகோள்கள் சம்பந்தமாக எதிர்வரும் 20ஆம் திகதி இதனுடன் தொடர்புடைய நிதி அமைச்சின் அதிகாரிகள், வரி திணைக்களம் மற்றும் சங்க அங்கத்தவர்களை ஆகியோருடன் கலந்துரையாடலை உடனடியாக நடத்தி சாதகமான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த அவர்கள் வாக்குறுதி அளித்தார்.

