முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மரணத்தில் சந்தேகம்; சாட்சிகளை அழிக்கும் அரசாங்கத்தின் சதித்திட்டமா? – இடதுசாரி மையத்தின் அழைப்பாளர் சமீர பெரேரா குற்றச்சாட்டு

0
10

முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மரணம் சாதாரணமான ஒன்று அல்ல என்றும், அது தொடர்பில் தமக்கு கடுமையான சந்தேகம் காணப்படுவதாகவும் இடதுசாரி மையத்தின் அழைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று (19) கொழும்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேலும் குறிப்பிட்டதாவது:
“முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மரணம் குறித்து எமக்கு பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த மரணத்தின் பின்னணியில் ஏதோவொரு பிரச்சினை மறைந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. கடந்த காலங்களில் தீர்க்கமான சாட்சியங்களை வழங்கிய நபர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில், இவருடைய மரணமும் ஒரு பாரதூரமான பிரச்சினையாகவே பார்க்கப்பட வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் இவர் மிகத் தீர்க்கமான வாக்குமூலங்களை வழங்கியிருந்ததாக கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

குறிப்பாக, ‘சாரா ஜாஸ்மின்’ என்பவரின் டிஎன்ஏ பரிசோதனையை மீண்டும் செய்ய வேண்டாம் என்று தனக்கு கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாக அவர் சாட்சியமளித்திருந்தார்.

இந்த விவகாரங்கள் எமக்கு பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இவ்வளவு பாரதூரமான சாட்சியங்களை வழங்கி சில நாட்களிலேயே அவர் மரணமடைந்துள்ளார்.

இதன் மூலம், நாட்டின் நிழல் அரசாங்கத்தின் ஆதிக்கம் இன்னும் தொடர்கிறது என்பதும், சாட்சிகளை திட்டமிட்டு அகற்றும் அல்லது அழிக்கும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறதோ என்ற பலத்த சந்தேகமும் எமக்கு எழுகிறது.

எனவே, இந்த மரணம் குறித்து மிக விரிவான மற்றும் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

மறுபுறம், ஒரு குறிப்பிட்ட குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடைய ஊழல் நிறைந்த இரு ஊடக நிறுவனங்கள், இந்த மரணத்தை ஒரு தற்கொலை என உடனடியாக சித்தரிக்க முயற்சிக்கின்றன. இந்த ஊடகங்களின் இத்தகைய அவசரமான செயற்பாடே, எமது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது” என சமீர பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here