5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைப் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பரீட்சைப் புள்ளிகளைக் காரணம் காட்டி பிள்ளைகளை உடலளவிலோ மனதளவிலோ துன்புறுத்துவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு எச்சரித்துள்ளது.
பிள்ளைகளின் பரீட்சைப் பேறுகளை வைத்து அவர்களைத் தண்டிப்பதையோ அல்லது மன உளைச்சலுக்கு ஆளாக்குவதையோ பெற்றோர்களும் பாதுகாவலர்களும் முற்றாகத் தவிர்க்க வேண்டும் என அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
சிறுவர்களுக்கு அசௌகரியம், மன அழுத்தம் அல்லது அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்களின் பரீட்சை முடிவுகளை ஊடகங்களிலோ சமூக வலைதளங்களிலோ பரப்புவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய செயல்கள் ‘சிறுவர் துஷ்பிரயோகம்’ குற்றச்சாட்டின்கீழ் வரும் என்றும், இதில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

