பெருந்தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 113ஆவது ஜனன தினம் நாடு முழுவதும் அனுஷ்டிப்பு

0
8

மலையகத்தின் தந்தை எனப் போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 113ஆவது ஜனன தினம் இன்று (30.08.2026) தலைநகர் கொழும்பிலும் மலையகத்தின் பல பகுதிகளிலும் வெகுவிமர்சையாக அனுஷ்டிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு, கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் (பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதி) அமைந்துள்ள அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவச்சிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும் நிதிச்செயலாளருமான மருதபாண்டி ராமேஷ்வரன், பிரதித் தலைவர்களான கணபதி கனகராஜ், அனுசியா சிவராஜா, தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல் மற்றும் உப தலைவர்கள், பிரதேச சபைத் தலைவர்கள், உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான ‘சௌமியபவனில்’ அமரரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

மேலும், கொட்டகலை C.L.F. வளாகம் உள்ளிட்ட மலையகத்தின் பல பகுதிகளிலும் நினைவேந்தல் நிகழ்வுகளும் விசேட அம்சங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

வரலாற்றுப் பங்களிப்பு:
சுதந்திர இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினராக அங்கம் வகித்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், மலையக மக்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார உரிமைகளுக்காகத் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துப் போராடியவர்.

இலங்கை இந்திய காங்கிரஸின் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றிய அவர், அதன் தலைவராகவும் செயற்பட்டார்.

பின்னர் அது ‘இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்’ என பெயர் மாற்றம் பெற்றபோதும் அதன் தலைவராக இருந்து மக்களை வழிநடத்தினார்.

நாட்டின் பல முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்த அவர், மலையக மக்களுக்கு மட்டுமல்லாது இலங்கையின் மிகச்சிறந்த தேசியத் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here