பாரம்பரிய மருத்துவத் துறைக்கு புதிய கட்டுப்பாடுகள்: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம் – Video

0
11

எமது நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரியமாக விளங்கும் பாரம்பரிய மருத்துவத் துறையை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் பல முன்மொழிவுகளை தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் தயாராகி வருகின்றது. பாரம்பரிய மருத்துவத் துறை மாணவர்கள் மருத்துவ சபையில் பதிவு செய்வதற்கான பரீட்சைக்குத் தோற்றுவதற்கு உயர்தரத்தில் மூன்று பாடங்களில் சித்தியடைவது கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இது பாரம்பரிய மருத்துவத் துறையை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தொலைநோக்கற்ற நிபந்தனையாக காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவர்களின் பிரச்சினைகள் குறித்து இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

 

சுகாதார அமைச்சர் இந்த முன்மொழிவை யதார்த்தத்திற்குப் புறம்பான நிலையில் இருந்துகொண்டே முன்வைத்துள்ளார். பாரம்பரிய மருத்துவத் துறையில் விரிவுரையாளர்களாக ஈடுபட்டுள்ள மருத்துவருக்கு 70 வயதுக்கு அதிகரிக்காதிருக்க வேண்டும் என்ற வரம்பு விதிக்கப்பட்டுள்ளமையானது ஒரு தொலைநோக்கற்ற தீர்மானமாகும். இது பாரம்பரிய மருத்துவத் துறையை முற்றாக அழிக்கும் செயல் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

விரிவுரையாளர்களான மருத்துவர்கள் தங்களுக்குக் கீழ் ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது இரத்த உறவுடைய ஒரு பிள்ளைக்கு மட்டுமே பயிற்சி அளிக்க முடியும் என இவ்வாறு கட்டுப்படுத்துவது எவ்வாறு சாத்தியம் என்ற கேள்வி எழுகின்றது. பாரம்பரிய மருத்துவத் துறையை மேம்படுத்துவதற்குப் பதிலாக அரசாங்கம் அதனை அழிப்பதற்கான முறையான சதித் திட்டத்தையே நடைமுறைப்படுத்தி வருகின்றது. இனியாவது இந்த தொலைநோக்கற்ற முயற்சிகளைக் கைவிட்டு பாரம்பரிய மருத்துவத் துறையைப் பலப்படுத்திப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இங்கு மேலும் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here