பதுளை உனுகல்ல தோட்டத்தில் இளைஞர் மீது முகாமையாளர் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு: 5வது நாளாகத் தொடரும் போராட்டம் – நாளை முக்கிய பேச்சுவார்த்தை

0
8

பதுளை, உனுகல்ல தோட்டத்தில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய தோட்ட முகாமையாளரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கக் கோரி, அத்தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் முன்னெடுத்து வரும் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (ஜூலை 22) ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது.

மல்வத்தவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான உனுகல்ல தோட்டத்தின் உனுகல்ல பிரிவைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளியின் மகனான கோகுலநாத் மனோஜ்காந்த், தனது வீட்டிற்கு அருகில் கோழிக்கூண்டு அமைப்பதற்கான அனுமதி கோரி கடந்த ஏப்ரல் மாதம் தோட்ட முகாமையாளரிடம் கடிதம் வழங்கியிருந்தார்.

மூன்று மாதங்கள் கடந்தும் பதில் கிடைக்காத நிலையில், கடந்த ஜூன் 17ஆம் திகதி அது குறித்து வினவுவதற்காகச் சென்ற இடத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து, தோட்ட முகாமையாளர் சானக்க தன்னைத் தாக்கியதாக மனோஜ்காந்த் ஹாலிஎல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அத்துடன் தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் அன்றைய தினமே ஹாலிஎல வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், முகாமையாளர் சாணக்கவை உடனடியாக அப்பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தியும், உனுகல்ல தோட்டத்தின் 4 பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த ஜூலை 18ஆம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர். அத்துடன் தோட்ட காரியாலயத்தில் உள்ள அதிகாரிகள் மக்களுக்குச் சரியான சேவைகளை வழங்குவதில்லை என்றும் தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஜூலை 20ஆம் திகதி தோட்டத்தின் உயர்மட்ட முகாமையாளரான சமிந்த பெரேரா சம்பவ இடத்திற்கு வருகை தந்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கப் பிரதிநிதி, முகாமையாளரின் தன்னிச்சையான செயற்பாடுகள் காரணமாக தொழிலாளர்கள் அச்சத்தில் இருப்பதாகவும், சட்ட நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்ளட்டும் என்றும் தெரிவித்தார்.

அதேநேரம் தோட்ட நிர்வாகத்தின் அடக்குமுறைகளைப் பொறுத்துக் கொள்ள இனிமேலும் தயார் இல்லை எனத் தெரிவித்த பெண் தொழிலாளி ஒருவர், “இன்று இந்தத் தாக்குதலை விட்டுவிட்டால் நாளை பெண்களை அடிக்கக்கூடிய நிலை வரும். மிரட்டியோ அடித்தோ வேலை வாங்குவதை ஏற்க முடியாது.
தோட்டத் துரை அடித்தால் நாங்களும் அடிப்போம், கங்காணி அடித்தால் அடிப்போம், கணக்குப்பிள்ளை அடித்தால் அடிப்போம். பழங்காலம் போல் அடி வாங்கிக் கொண்டிருக்க முடியாது, யார் அடித்தாலும் திருப்பி அடிப்போம்,” என ஆவேசமாகத் தெரிவித்தார்.

 

இந்நிலையில், தொழிற்சங்கங்கள் விடுத்த கடிதக் கோரிக்கைக்கு அமைய, நிலவும் பிரச்சினை குறித்து ஆராய்வதற்காகப் பதுளை மாவட்ட உதவி தொழில் ஆணையாளர் அலுவலகத்தில், உதவி தொழில் ஆணையாளர் தலைமையில் நாளைய தினம் விசேட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகப் பிராந்திய ஊடகவியலாளர் தெரிவிக்கின்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here