நீதித்துறை சுயாதீனம், அரசாங்கத்தின் தோல்விகள் குறித்து நாமல் ராஜபக்ச கடுமையான விமர்சனம்

0
2

இன்று பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள், நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மற்றும் நாட்டில் நிலவும் வறட்சி நிலைமை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், அரசியல்வாதிகள் நீதிமன்றத் தீர்ப்புகளை முன்கூட்டியே அறிவிப்பதும், குறிப்பிட்ட சிலரைக் கைது செய்யப்போவதாகக் கூறுவதும் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையைக் கடுமையாகப் பாதித்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார். சட்டம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை அரசியல்மயப்படுத்துவதைத் தடுத்து, நீதித்துறைக்கான கௌரவத்தையும் சுயாதீனத்தையும் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை விவரித்த நாமல் ராஜபக்ச, வாக்குறுதியளித்தபடி விவசாயிகளுக்கு உரங்களை சரியான நேரத்தில் விநியோகிக்கவோ, நெல்லுக்கு நியாயமான விலையைப் பெற்றுத்தரவோ அரசாங்கத்தால் முடியவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும், மீனவர்களுக்கான எரிபொருள் நிவாரணம் மற்றும் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்களை முறையான திட்டமிடலின்றி செயற்படுத்துவதில் அரசாங்கம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்குப் பதிலாகத் தேவையற்ற மற்றும் முறைகேடான செயற்பாடுகளிலேயே கவனம் செலுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

பாராளுமன்ற விசாரணைகள் மற்றும் அறிக்கைகள் குறித்துக் குறிப்பிடுகையில், பாராளுமன்றக் குழுக்கள் மற்றும் விசாரணைகள் குறிப்பிட்ட நபர்களை இலக்குவைத்து பழிவாங்கும் நோக்கில் நடத்தப்படுவதாக அவர் சாட்டினார். வெளிப்படையான விசாரணை இன்றி, குறிப்பிட்ட சிலரைத் தப்பவைத்துவிட்டு ஏனையோரைப் பலிகடா ஆக்கும் போக்கை ஒருபோதும் ஏற்க முடியாது எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

நாட்டில் நிலவும் எல் நினோ நிலைமை மற்றும் வறட்சி குறித்துப் பேசிய அவர், வறட்சியினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தும், அரசாங்கம் உரிய முன்னாயத்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றார். குடிநீர் பற்றாக்குறை மற்றும் விவசாய நிலங்களுக்கான நீர் மேலாண்மை தொடர்பில் அரசாங்கம் காட்டிவரும் அலட்சியப் போக்கே தற்போதைய நெருக்கடிக்கு முதன்மை காரணம் என்றும், அரசாங்கம் தனது தவறுகளை மறைக்க பொய்ப் பிரசாரங்களை முன்னெடுப்பதை நிறுத்திவிட்டு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ச கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here