“தி நெக்ஸ்ட் சேப்டர்” திட்டத்தின் கீழ் பயிற்சியாளர் அல்முதாய்ரியின் ஒப்பந்தத்தை புதுப்பித்தது FFSL!

0
7

இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) புதிதாக ஆரம்பித்துள்ள “தி நெக்ஸ்ட் சேப்டர்” (The Next Chapter) என்னும் புதிய மூலோபாய அபிவிருத்தி திட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கை தேசிய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் (Head Coach) அப்துல்லா அல்முதாய்ரியின் (Abdullah Almutairi) ஒப்பந்தத்தை உத்தியோகபூர்வமாக புதுப்பித்துள்ளது.
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் மற்றும் தலைமைப் பயிற்றுவிப்பாளர் அல்முதாய்ரி ஆகியோருக்கு இடையில், இலங்கை கால்பந்தாட்டத்தின் எதிர்கால இலக்குகள் மற்றும் திட்டங்கள் குறித்து இடம்பெற்ற சுமுகமான கலந்துரையாடலைத் தொடர்ந்தே இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

சாதனைகளுக்கு கிடைத்த அங்கீகாரம்
கடந்த இரண்டு வருடங்களாக தலைமைப் பயிற்றுவிப்பாளர் அல்முதாய்ரி காட்டிய அர்ப்பணிப்பு, தொழில்முறைத்தன்மை மற்றும் அவர் பெற்றுத்தந்த சாதகமான முடிவுகளுக்கு தலைவர் ஜஸ்வர் உமர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். அத்துடன், “தி நெக்ஸ்ட் சேப்டர்” திட்டத்தின் கீழ் தேசிய அணி அடைய வேண்டிய புதிய இலக்குகள் மற்றும் செயல்திறன் மட்டங்கள் குறித்தும் அவர் இதன்போது தெளிவுபடுத்தினார்.

தலைமைப் பயிற்றுவிப்பாளர் அல்முதாய்ரி தனது முதலாவது பதவிக்காலத்தை பெரும் வெற்றிகளுடன் நிறைவு செய்திருந்தார். அவரது வழிகாட்டலின் கீழ், சர்வதேச அரங்கில் இலங்கை அணி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டது. குறிப்பாக, மிகக் குறுகிய காலத்திற்குள் பல சர்வதேச வெற்றிகளைப் பதிவு செய்த இலங்கை அணி, ஃபிஃபா (FIFA) உலகத் தரவரிசையில் 205 வது இடத்திலிருந்து 187 வது இடம் வரை கணிசமான முன்னேற்றத்தைக் கண்டமை குறிப்பிடத்தக்கது.

சம்மேளனத் தலைவரின் கருத்து

இது குறித்து கருத்து தெரிவித்த சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர், “அல்முதாய்ரியின் முதலாவது பதவிக்காலத்தில் எட்டப்பட்ட சாதனைகள் மற்றும் முக்கிய இலக்குகளின் வெற்றிகரமான நிறைவு குறித்து சம்மேளனம் முழு திருப்தியடைகிறது. இதன் காரணமாகவே, அவரது தலைமைத்துவம் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் மீதான நம்பிக்கையின் அடிப்படையில், அவருக்கு இரண்டாவது பதவிக்காலத்திற்கான ஒப்பந்தத்தை வழங்குவதில் சம்மேளனம் எவ்வித தயக்கமும் காட்டவில்லை.” எனத் தெரிவித்தார்.

எதிர்கால இலக்குகள்
புதிய ஒப்பந்தத்தின் மூலம், சம்மேளனத்தின் புதிய தொழில்நுட்ப மற்றும் போட்டி இலக்குகளை வழிநடத்தும் பொறுப்பு பயிற்சியாளர் அல்முதாய்ரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், வரவிருக்கும் சர்வதேச போட்டிகளுக்கான தயாரிப்புகள் மற்றும் தேசிய அணியின் நீண்டகால வெற்றிப் பயணத்திற்கான உத்திகளை அவர் முன்னெடுப்பார்.
இலங்கை கால்பந்தாட்டத்தின் அடித்தளத்தை பலப்படுத்தவும், போட்டித்தன்மையை அதிகரிக்கவும், பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் அதிக அங்கீகாரத்தைப் பெறவும் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளில் இந்த ஒப்பந்தப் புதுப்பித்தல் ஒரு முக்கிய மைல்கல்லாகும். முறையான தொலைநோக்கு பார்வை, வலுவான தலைமைத்துவம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான அர்ப்பணிப்புடன் இலங்கை கால்பந்தாட்டம் தற்போது அனைத்து துறைகளிலும் சீரான முன்னேற்றத்தைக் கண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here