ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க – சட்டத்தரணிகள் சங்க சந்திப்பு: நீதிபதிகளின் ஓய்வூதிய வயது தொடர்பான கோரிக்கை மற்றும் எதிர்ப்பால் பரபரப்பு

0
3

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்த இச்சந்திப்பின் போது, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை நீடிப்பது தொடர்பில் நிபுணர்களுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தி, அதன் பின்னரே இறுதித் தீர்மானங்களை முன்னெடுக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கலந்துரையாடல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் தீர்மானத்தை எதிர்ப்பதற்கான காரணங்கள் குறித்து ஜனாதிபதியிடம் விரிவாக எடுத்துரைத்ததாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமிருந்தும் பரிந்துரைகளைப் பெற்று, அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சந்திப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தை விட்டு வெளியேறிய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் மற்றொரு மூத்த சட்டத்தரணியும் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துவிட்டு புறப்படத் தயாரான வேளையில், அங்கு வந்த நபர் ஒருவர் தலைவருக்குக் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here