செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட்டார் நீதி அமைச்சர்: மேலும் 3 என்புக்கூடுகள் மீட்பு! Video

0
37

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 29ஆம் நாள் பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டன. இன்றைய தினம் நீதி அமைச்சர் உள்ளிட்ட விசேட குழுவினர் அகழ்வுப் பணிகளை நேரில் வருகை தந்து பார்வையிட்டுள்ளனர்.

அத்துடன், இன்றைய அகழ்வாராய்ச்சியின் போது மேலும் 3 மனித என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், புதிதாக மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஒன்றாகக் காணப்படும் என்புக்கூட்டுக் குவியல்

இன்றைய அகழ்வுகளின் போது அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில், 8 என்புக்கூடுகள் ஒரே இடத்தில் ஒன்றாகக் குவியலாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, அகழ்வுப் பகுதியில் ஒரு பாரிய உலோகத் துண்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த உலோகத் துண்டிற்குள்ளும் மனித என்புக்கூடுகள் காணப்படுவதனால், அவற்றைச் சேதமடையாமல் பக்குவமான முறையில் சுத்தப்படுத்தி மீட்டெடுக்கும் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை 394 என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி புதைகுழி பகுதியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் அடிப்படையில், மொத்தம் 394 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் 370 என்புக்கூடுகள் இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீதி அமைச்சர் மற்றும் விசேட குழுவினர் விஜயம்

பரபரப்பாக இடம்பெற்று வரும் இந்த அகழ்வுப் பணிகளை, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு, நிலைமைகளைக் கேட்டறிந்தனர்.

இந்த விஜயத்தில் நீதி அமைச்சருடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் (OMP) ஆணையாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் குழுவினரும் கலந்துகொண்டு புதைகுழி அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here