இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள 2025/26ஆம் ஆண்டுக்கான ‘சூப்பர் லீக்’ தொடரின் விறுவிறுப்பான போட்டியொன்று கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று (18) நடைபெற்றது.
கொழும்பின் பலம் வாய்ந்த இரு அணிகளான ரெனோன் விளையாட்டுக் கழகம் மற்றும் ரத்னம் விளையாட்டுக் கழகம் ஆகியன மோதிக்கொண்ட இப்போட்டியில், ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய ரெனோன் கழக அணி 3-0 என்ற கோல் கணக்கில் ரத்னம் கழக அணியை வீழ்த்தி, ஒரு நேர்த்தியான மற்றும் உறுதியான வெற்றியைப் பதிவு செய்து முழுமையான 3 புள்ளிகளையும் தன்வசப்படுத்திக் கொண்டது.

போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் கோல் போடுவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டன. முற்பாதி ஆட்டத்தில் இரு அணியினரின் தற்காப்பு அரண்களும் மிக வலுவாகச் செயல்பட்டதால் எந்தவொரு அணியினாலும் கோல் அடிக்க முடியாமல் போனது. இதனால் முற்பாதி ஆட்டம் 0-0 என்ற கணக்கில் சமநிலையில் நிறைவுற்றது.
இந்த முற்பாதியின் கூடுதல் நேரத்தில் ரெனோன் அணியின் அமான் பைசர் 45+2ஆவது நிமிடத்தில் ஒரு மஞ்சள் அட்டை எச்சரிக்கையைப் பெற்றார்.

முன்னதாக ரத்னம் அணியின் அல்போன்ஸ் கிறிஸ்டுராஜும் 27ஆவது நிமிடத்தில் மஞ்சள் அட்டை எச்சரிக்கை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், பிற்பாதியில் வெயிலுடனான காலநிலை நிலவிய போதிலும் உத்வேகத்துடன் களம் புகுந்த ரெனோன் அணி ஆட்டத்தின் போக்கை முற்றாக மாற்றியது.

ஆட்டத்தின் 53ஆவது நிமிடத்தில், ரெனோன் அணியின் திறமைமிகு வீரர் அமான் பைசர் அணியின் முதலாவது கோலைப் புகுத்தி ரத்னம் அணிக்கு அதிர்ச்சியளித்தார்.
இந்த அதிர்ச்சியிலிருந்து ரத்னம் அணி மீள்வதற்குள், அடுத்த சில நிமிடங்களில் அதாவது ஆட்டத்தின் 56ஆவது நிமிடத்தில், ரெனோன் அணியின் பஸ்லூர் அஹமட் மிக நேர்த்தியாக மற்றுமொரு கோலை அடித்து அணியின் முன்னிலையை 2-0 என உயர்த்தினார்.

அதனைத் தொடர்ந்து ஆட்டத்தை தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ரெனோன் அணிக்கு, போட்டியின் இறுதித் தருணத்தில் மாற்று வீரராக களம் புகுந்த முஹம்மத் ஷாஹில் போட்டியின் கூடுதல் நேரத்தில், அதாவது 90+3ஆவது நிமிடத்தில் மூன்றாவது கோலையும் அடித்து, அணியின் வெற்றியை 3-0 என உறுதியாக நிலைநாட்டினார்.

பிரதான நடுவர் சஷாங்க மதுஷங்கவின் வழிநடத்தலில் நடைபெற்ற இப்போட்டியில், ரெனோன் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பஸ்லூர் ரஹ்மானின் சாதுரியமான வியூகங்கள் அணிக்கு இந்த மிக முக்கியமான வெற்றியைத் தேடித்தந்துள்ளது.
மறுபுறம், தலைமை பயிற்சியாளர் கசுன் ஜயசூரியவின் ரத்னம் அணி பிற்பாதியில் தற்காப்பில் கோட்டைவிட்டதால் இந்தத் தோல்வியைத் தழுவ நேரிட்டதுடன், சூப்பர் லீக் புள்ளிப்பட்டியலில் இந்த வெற்றி ரெனோன் அணிக்கு ஒரு வலுவான முன்னேற்றத்தை அளித்துள்ளது.


