2024 ஜனவரி மாதத்தில், காசாவின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய கடுமையான குண்டுவீச்சுகளால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் தெற்குப் பகுதி நோக்கி இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர்.
அப்போது நடந்த ஒரு நெஞ்சை பிளக்கும் சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
5 வயது பாலஸ்தீன சிறுமி ஹிந்த் ரஜாப், தனது குடும்பத்தினருடன் காரில் தெற்குப் பகுதி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இஸ்ரேலிய டாங்கிகளால் வழிமறிக்கப்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
முதற்கட்டத் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஹிந்த் ரஜாப், காரின் உள்ளே சிக்கியவாறு செம்பிறை சங்கத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உதவி கோரினார்.
சிறுமியை மீட்கச் சென்ற இரண்டு செம்பிறை சங்க அவசரக்கால மீட்புப் பணியாளர்களும் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அவர்களின் ஆம்புலன்ஸ் வாகனம் துப்பாக்கிச் சூட்டினால் கடுமையாகச் சேதமடைந்த நிலையில் பின்னர் கண்டெடுக்கப்பட்டது.
இறுதியில், சிறுமி ஹிந்த் ரஜாப் மற்றும் அவரது குடும்பத்தினர் சடலமாக மீட்கப்பட்டனர்.
தற்போது இது தொடர்பான விசாரணைகள் குறித்த செய்திகள் வெளியாகி வரும் போதிலும், இந்த விசாரணை சிறுமி ஹிந்திற்கும் அவரது குடும்பத்தினருக்கும் உண்மையான நீதியைப் பெற்றுத் தரும் என்பதில் அங்குள்ள மக்களுக்குப் பெரும் சந்தேகம் நிலவுகிறது.
