காகிதக் கோப்புகளுக்கு விடை கொடுக்கும் அரசு – அரச துறையில் டிஜிட்டல் புரட்சி

0
38

அரசின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டத்தின் முக்கிய கட்டமாக, அரச துறையில் நிறுவன ரீதியான டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் “Public Impact Champions Network (PIC-Net)” எனப்படும் புதிய முன்னோடி வலையமைப்பை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.

பொதுமக்களுக்கு விரைவான, திறமையான மற்றும் உயர்தர சேவையை வழங்கும் வகையில் அரச துறையின் செயல்திறனை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இது தொடர்பான அறிவுறுத்தல்களை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அனைத்து அமைச்சு செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், ஆணையாளர் நாயகங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு சுற்றறிக்கையின் மூலம் அறிவித்துள்ளார்.

PIC-Net திட்டத்தின் கீழ், ஒவ்வொரு அரச நிறுவனத்திலும் இருந்து டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுக்கக் கூடிய 4 அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்டு, சிறப்பு முன்னோடி குழுவாக நியமிக்கப்படவுள்ளனர்.

இந்த குழுக்கள் தொழில்நுட்பப் பயன்பாடு, சேவை மேம்பாடு, செயல்முறை திறன் மற்றும் நிறுவன மாற்றங்கள் போன்ற துறைகளில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து, டிஜிட்டல் யுகத்திற்கேற்ற அரச சேவையை உருவாக்கும் பணியில் ஈடுபடவுள்ளனர்.

இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் 400 டிஜிட்டல் மாற்ற முன்னோடிகள் கொண்ட தேசிய வலையமைப்பு உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகளுக்கு டிஜிட்டல் மாற்றம், சேவை மறுவடிவமைப்பு, செயல்முறை மேம்பாடு மற்றும் மாற்ற மேலாண்மை தொடர்பான விசேட பயிற்சிகளும் நிபுணர் வழிகாட்டல்களும் வழங்கப்படவுள்ளன.

மேலும், இந்த முன்னோடிகள எதிர்காலத்திலும் அரச நிறுவனங்களுக்கிடையில் அறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு தொடர்ச்சியான மாற்றங்களை ஏற்படுத்தும் மைய சக்தியாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்கு ஜனாதிபதி செயலகம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் GovTech Sri Lanka இணைந்து வழிகாட்டல் வழங்குவதோடு, ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) ஆதரவுடன் முகாமைத்துவ ஆலோசகர்களும் நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here