“என் மீதான குற்றச்சாட்டை எதிர்கொள்வேன்” – இறுதிச்சடங்கில் வைத்து அதிரடியாக பதிலளித்த மஹிந்த

0
37

இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அழைப்பை ஏற்று, குறிப்பிட்ட தினத்தில் தாம் ஆஜராகத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டபோது ஊடகங்களிடம் அவர் இதனை குறிப்பிட்டார்.

எயார்பஸ் விமான கொள்வனவு தொடர்பான விசாரணைகளுக்காக, எதிர்வரும் 12 ஆம் திகதி இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்காக 06 எயார்பஸ் A-330 மற்றும் 08 எயார்பஸ் A-350 ரக விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோது, 02 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாக முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி நியோமாலி விஜேநாயக்க மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

விசாரணைகளின் போது கிடைத்த தொகையில், 20 மில்லியன் ரூபாவை அப்போதைய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கும், 60 மில்லியன் ரூபாவை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் வழங்கியதாக கபில சந்திரசேன வாக்குமூலம் வழங்கியதாக இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன, தமது வாடிக்கையாளர் கபில சந்திரசேன அச்சுறுத்தப்பட்ட பின்னரே அந்த வாக்குமூலம் பெறப்பட்டதாக கூறி, அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here