இலங்கையில் சட்டத்துறையினரை உருவாக்கும் 152க்கும் அதிகமான ஆண்டுகால வரலாற்றுப் பெருமைமிக்க ஒரேயொரு நிறுவனமான இலங்கை சட்டக் கல்லூரி, சமகால உலகளாவிய சட்டக் கல்வித் தரங்களுக்கு இணையாகத் தன்னை உயர்த்திக் கொள்ளும் நோக்கில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மைல்கல்லை இன்று எட்டியுள்ளது.

கூட்டிணைக்கப்பட்ட சட்டக்கல்விப் பேரவையின் வழிகாட்டுதலின் கீழ், சட்டக் கல்லூரியின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் கற்றல் மேலாண்மை அமைப்பு (LMS) மற்றும் மாணவர் மேலாண்மை அமைப்பு (SMS) ஆகியவற்றின் ஆரம்ப விழா மற்றும் புதிய திருத்தப்பட்ட பாடத்திட்ட அறிமுக நிகழ்வு இன்று (20) மாலை இலங்கை சட்டக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கையின் கௌரவ பிரதம நீதியரசர் “நீதியரசர் பி. பத்மன் சூரசேன” அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன், நீதி அமைச்சு, ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (UNDP) மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் செயல்படுத்தப்படும் ‘நீதிக்கான ஆதரவுத் திட்டம்’ ஊடாக இத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இன்றைய வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்நிகழ்வு முதன்மை விருந்தினரான கௌரவ பிரதம நீதியரசர் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு முக்கிய பிரமுகர்களின் வருகையுடன் ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி மங்கள விளக்கேற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. நிகழ்வின் வரவேற்புரையை இலங்கை சட்டக் கல்லூரியின் முதல்வர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. பிரசந்த லால் டி அல்விஸ் அவர்கள் நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் (UNDP) பிரதி வதிவிடப் பிரதிநிதி திருமதி. மரினா டென் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
சட்டக் கல்லூரியின் கலைக் குழுவினரின் பாரம்பரிய முரசு முழக்கக் கலை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, சட்டக் கல்லூரி டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி கடந்து வந்த பாதை குறித்த விசேட காணொளி காட்சிப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பாடத்திட்ட சீர்திருத்தங்கள் குறித்த விரிவான விளக்கக்காட்சியை கல்லூரி முதல்வர் திரு. பிரசந்த லால் டி அல்விஸ் அவர்கள் வழங்கினார்.

அதன் பின்னர், கற்றல் மேலாண்மை அமைப்பு (LMS) மற்றும் மாணவர் மேலாண்மை அமைப்பு (SMS) ஆகியவற்றின் உத்தியோகபூர்வ ஆரம்ப விழாவைக் கௌரவ பிரதம நீதியரசர் அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து முதன்மை விருந்தினரான கௌரவ பிரதம நீதியரசர் ‘நீதியரசர் பி. பத்மன் சூரசேன’ அவர்கள் தனது விசேட உரையை ஆற்றினார். அதில், சமகால சட்டக் கல்வியை நவீன தொழில்நுட்பத்துடன் இணைப்பதன் அவசியத்தையும், இந்த டிஜிட்டல் மாற்றத்தின் முக்கியத்துவத்தையும் அவர் விவரித்தார்.

நிகழ்வின் இறுதிப் பகுதியில், பங்களிப்பு செய்தோருக்கான பாராட்டு உபசாரங்கள் வழங்கப்பட்டதுடன், சட்டக் கல்லூரியின் கலை வட்டத்தின் விசேட கலை நிகழ்ச்சியும் அரங்கேறியது.
இறுதியாக இலங்கை சட்டக் கல்லூரியின் உப முதல்வர் திரு. ஆர். ஷெஹான் சி. பெரேரா அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு வெற்றிகரமாக நிறைவுற்றது.
இதுவரை 48,000க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகளை நாட்டுக்குத் தந்துள்ள இலங்கை சட்டக் கல்லூரி, இந்த டிஜிட்டல் மற்றும் பாடத்திட்ட சீர்திருத்தத்தின் மூலம் நவீன சட்டக் கல்வியில் ஒரு புதிய யுகத்தைத் தடம் பதித்துள்ளது.


