இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக கருணாரத்னவுக்கு எதிரான வழக்கு: DNA பரிசோதனை கோரிக்கையை நிராகரித்தது கொழும்பு மாவட்ட நீதிமன்றம்

0
3

இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக கருணாரத்னவின் இரத்த மாதிரிகளைப் பெற்று, DNA பரிசோதனைக்கு உட்படுத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (04) நிராகரித்துள்ளது.

விமான பெண் ஓட்டுநரான ரசிகா செவ்வந்தி என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தனது குழந்தைக்கு சாமிக கருணாரத்னவே தந்தை என தெரிவிக்கும் பிறப்புச் சான்றிதழை வழங்குமாறு பதிவாளர் நாயகத்திற்கு உத்தரவிடக் கோரி இவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், மனுதாரரால் கோரப்பட்ட நிவாரணத்தை வழங்குவதற்குப் போதுமான ஆதாரங்கள் அல்லது காரணங்கள் முன்வைக்கப்படவில்லை எனக் கூறி, DNA பரிசோதனைக்கான கோரிக்கையை நிராகரிப்பதாக அறிவித்தது.

இருப்பினும், இந்த வழக்கின் மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் அக்டோபர் மாதம் 09 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் கிரிக்கெட் வீரர் சாமிக கருணாரத்ன, அவரின் குழந்தை எனக் குறிப்பிடப்படும் ஆரியன் கருணாரத்ன மற்றும் பதிவாளர் நாயகம் உள்ளிட்ட பலர் எதிர்மனுதாரர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

மனுதாரரான ரசிகா செவ்வந்தி வழங்கிய வாக்குமூலத்தில், தனது மைனர் குழந்தையான ஆரியன் கருணாரத்ன 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி சாமிக கருணாரத்னவுக்கு மகனாகப் பிறந்ததாகத் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டில் சாமிக கருணாரத்ன தம்முடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாகவும், அதன் பின்னர் தான் கர்ப்பமடைந்த வேளையில் அவர் தன்னைப் புறக்கணிக்கத் தொடங்கியதோடு, குழந்தையின் பிறத்துவத்தை ஏற்க மறுத்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே, அக்குழந்தையின் தந்தை சாமிக கருணாரத்ன என அறிவிக்குமாறும், அதற்கேற்ப தந்தையின் பெயரைக் குறிப்பிட்டு பிறப்புச் சான்றிதழை வழங்குமாறு பதிவாளர் நாயகத்திற்கு உத்தரவிடுமாறும், குழந்தையையும் சாமிக கருணாரத்னவையும் டீஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் அவர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here