இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் உறுதியில் சர்வதேச நாணய நிதியம்

0
27

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிகளுக்கான முயற்சிகளுக்கு தொடர்ந்தும் முழுமையான ஆதரவை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

நேற்று(14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கோசாக் குறிப்பிடுகையில், அண்மைக் காலங்களில் இலங்கை பெரும் பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்திய இரண்டு பாரிய அதிர்ச்சிகளை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அவற்றில் முதலாவது “டித்வா” புயல் என்றும், இது இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு இயற்கை அனர்த்தம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இரண்டாவது அதிர்ச்சியாக, மத்திய கிழக்கு போரின் தொடர்ச்சியான தாக்கம் பற்றி அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான சவால்களுக்கு மத்தியிலும், இலங்கையின் மக்களும் பொருளாதாரமும் விதிவிலக்கான மீளெழும் திறனை வெளிப்படுத்தியுள்ளதாக கோசாக் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் சீர்திருத்த வேலைத்திட்டத்தின் கீழான நடவடிக்கைகள் தற்போது பலன் அளிக்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதிகாரிகளின் வலுவான அர்ப்பணிப்பு காரணமாக இலங்கையின் பொருளாதாரச் செயல்பாடு மேம்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இலங்கை அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதுடன், எதிர்காலத்தில் வழங்கக்கூடிய ஆதரவுகள் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும், இலங்கைக்கு ஆதரவளிப்பதில் சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்தும் உறுதியுடன் இருப்பதாகவும் ஜூலி கோசாக் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here