மத்திய கிழக்கு போர் சூழலைச் சாட்டாக வைத்து நாட்டில் செயற்கையாக உருவாக்கப்பட்ட எரிபொருள் நெருக்கடி இன்னும் தணியவில்லை என்றும், அரசாங்கத்தின் ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்தின் காரணமாகவே மக்கள் இதன் தீவிர விளைவுகளைச் சந்தித்து வருவதாகவும் திவுலப்பிட்டிய இணை அமைப்பாளர் சங்க அபயவர்தன தெரிவித்துள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:
“உலக வரலாற்றிலேயே மிக அதிக விலைக்கு எரிபொருளைக் கொள்முதல் செய்ய தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, ஏப்ரல் மாதத்தில் மட்டும் விநியோகஸ்தர்களுக்கும் இடைத்தரகர்களுக்கும் 18 பில்லியன் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாங்கள் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம்.
இருப்பினும், மே மாதத்திலும் ஏப்ரல் மாதத்தைப் போலவே பெருந்தொகையான பணத்தை இடைத்தரகர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ளது.
ஊழலை ஒழிப்பதாகக் கூறி அதிகாரத்திற்கு வந்த அரசாங்கம், மாதம் தோறும் கோடிக்கணக்கான ரூபாய்களை ஊழல் செய்து வருகிறது.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 92 ரக பெட்ரோலுக்குச் செலுத்த வேண்டிய 3.53 டொலருக்குப் பதிலாக 20 டொலர்களும், டீசலுக்குச் செலுத்த வேண்டிய 4.08 டொலருக்குப் பதிலாக 41 டொலர்களும் செலுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறான ஊழல்களுக்கு வழிவகுக்கும் வகையில் நாட்டின் எரிபொருள் கையிருப்பைச் சரியாக நிர்வகிக்கத் தவறியதால், மக்கள் இன்று QR குறியீடுகளுக்குப் பின்னால் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, கூரைமீதான சூரிய மின்சக்தி (Rooftop Solar) கட்டமைப்புகளை முடக்குவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுச் செயற்படுகிறது. சூரிய மின்சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு அலகு மின்சாரத்திற்கு 14 முதல் 23 ரூபாய் வரை வழங்குவது அதிகம் எனக் கூறும் அரசாங்கம், டீசலில் இயங்கும் மின்நிலையங்களில் இருந்து ஒரு அலகு மின்சாரத்தைப் பெற 238 ரூபாய் வரை செலுத்துகிறது. டீசல் மின்நிலையங்கள் மூலம் அதிக லாபம் ஈட்டுவதற்கும், ஊழலை நியாயப்படுத்துவதற்கும் ஏதுவாகவே சூரிய மின்சக்தி பயன்பாட்டை அரசாங்கம் திட்டமிட்டுச் சீர்குலைக்கிறது.
தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்ததன் மூலம் நாட்டிற்கு 200 பில்லியன் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்திய அரசாங்கம், நாளொன்றுக்கு 10 லட்சம் லீட்டர் டீசலையும் வீணடித் துள்ளது. மக்கள் எரிபொருள் வரிசைகளிலும், அதிக மின்சாரக் கட்டணங்களினாலும் துயரப்படும் இந்தச் சந்தர்ப்பத்தில், நாட்டின் எரிசக்தித் துறையைத் தமது கட்சிக்கு நிதி திரட்டும் ஒரு வழியாய் அரசாங்கம் மாற்றிக்கொண்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த ஊழல் அலைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி குரல்கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது. எனவே, மக்களுக்குப் பொய் பரப்புரை செய்வதை நிறுத்திவிட்டு, மக்களின் வாழ்வாதாரச் சுமையைக் குறைத்து, நாட்டின் எரிசக்திக் கொள்கையைச் சரியாக நிர்வகிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக தலைமையிலான அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.

