ஹெரோயினுடன் “குடுநோனா” கைது: கிரிபத்கொட பொலிஸார் நடவடிக்கை

0
8

பல வருடங்களாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த “நோனா அம்மா” என்றழைக்கப்படும் பத்மா ரஞ்சனி என்ற பெண், கிரிபத்கொட பொலிஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

செட்டிகுளத்தைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவருக்கு போதைப்பொருள் விநியோகிக்க வந்தபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிபத்கொட மற்றும் கொம்பனித்தெரு பகுதிகளைச் சேர்ந்த 54 வயதான இவர், இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தமையினால் “கொம்பனித்தெரு குடுநோனா” என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நேரத்தில், விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 50 கிராம் ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்ட 48,000 ரூபா ரொக்கம் என்பன அவரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நீண்டகாலமாக பொலிஸாரிடம் இருந்து தப்பித்து வந்த இவர், ஏற்கனவே நிலுவையில் உள்ள போதைப்பொருள் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் ஆவார்.

அரச பகுப்பாய்வாளர் அறிக்கையின்படி, அந்த முந்தைய வழக்கில் அவரிடமிருந்து 34 கிராம் ஐஸ் (Ice) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது சந்தேகநபர் விஷப் போதைப்பொருள் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு பொலிஸாரால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

அத்துடன் போதைப்பொருள் விற்பனை மூலம் இவர் ஈட்டிய பணம், சொத்துக்கள் மற்றும் ஏனைய வளங்கள் குறித்தும் கிரிபத்கொட பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

விசாரணைகளின் மூலம், அண்மையில் இரு பாதாள உலகக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “சூட்டி உக்குங்” என்பவரின் அத்தை (மாமி) இவரென தெரியவந்துள்ளது.

மேலும், “கூம்பிக்கெலே சூட்டி” என அழைக்கப்படும் இவரது கணவரும் தற்போது போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here