ஹரக் கட்டாவிடம் 12 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித உட்பட மூவர் ஜூலை 3 வரை விளக்கமறியலில்… Video

0
12

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச உள்ளிட்ட மூவர், பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் ‘ஹரக் கட்டா’ எனப்படும் நந்துன் சிந்தக்கவின் தரப்பிடம் இருந்து பெருந்தொகை பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் எதிர்வரும் ஜூலை மாதம் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு துபாயில் வைத்து, ‘ஹரக் கட்டா’வின் மனைவி மதுஷிகா மதுவந்தியிடம் இருந்து சந்தேகநபர்களால் முதலில் 50 கோடி ரூபாய் இலஞ்சமாகக் கோரப்பட்டுள்ளதுடன், பின்னர் அந்தத் தொகை 20 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டு, அதில் முதற்கட்டமாக 12 கோடி ரூபாய் முற்பணமாகப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பயங்கரவாத ஒழிப்புப் பிரிவின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ‘ஹரக் கட்டா’ பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்படுவதைத் தடுப்பது, அவரது தடுப்புக் காவல் உத்தரவை நீக்கி பூஸா சிறைச்சாலைக்கு மாற்றுவதைத் தவிர்த்து வேறு சிறைக்கு மாற்றுவது மற்றும் அவர் மீதான விசாரணைகளில் இருந்து அவரை விடுவிக்க உதவி செய்வது ஆகியவற்றுக்கு உடன்பட்டே இந்த பெருந்தொகை பணம் இலஞ்சமாகப் பெறப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணைக்கோரிக்கைகளை நிராகரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டுகளின் பாரதூரத்தன்மையைக் கருத்திற்கொண்டு இவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளதுடன், இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here