இலங்கையில் தேங்கிக்கிடக்கும் லட்சக்கணக்கான வழக்குகளுக்கு விரைவாக தீர்வுகாண்பதற்கு, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
நீதிமன்றக் கட்டமைப்பில் நிலவும் தாமதங்கள் மற்றும் நீதிபதிகளின் சேவைக்கால நீடிப்புத் தொடர்பான சர்ச்சைகள் குறித்து கொழும்பில் இன்றைய தினம் (06) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கை நீதிமன்றங்களில் தற்போது சுமார் 11 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக உச்ச நீதிமன்ற நீதியரசர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிவித்த அவர், இதன் காரணமாக ஒரு வழக்கின் விசாரணை முடிவடைவதற்கே 10 முதல் 12 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய துரதிர்ஷ்டவசமான சூழல் காணப்படுவதாகக் கவலை வெளியிட்டார்.
உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 70 அல்லது 75 ஆகக் காணப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டிய அவர், தொழில்முறை ரீதியாக அனுபவம் முதிர்ச்சியடையும் போதே சிறந்த நிபுணத்துவம் கிடைக்கும் என்பதால், மூத்த நிபுணர்களின் சேவையை நாடு தொடர்ந்து பெற்றுக்கொள்வது அவசியமாகும் என்றார்.
அரசியலமைப்பின் 20-ஆவது திருத்தத்தின் போது நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதே தவிர, அவர்களின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்படவில்லை என்றும், அன்று ஏற்பட்ட அந்தத் தவறைச் சரிசெய்வதற்கே தற்போதைய திருத்தங்கள் மூலம் முயற்சிக்கப்படுகிறது என்றும் அவர் விளக்கமளித்தார்.
கீழ் நீதிமன்றங்கள் முதற்கொண்டே நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் போது, அது அந்தத் துறையிலுள்ள அதிகாரிகளுக்குப் பெரும் சாதகமாக அமைவதோடு நாட்டிற்கும் நன்மையளிக்கும் என அவர் மேலும் கூறினார்.
நீதிபதிகளின் சேவைக்காலத்தை நீடிப்பதன் மூலம் நீதித்துறையில் அரசியல் தலையீடுகள் ஏற்படும் என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்த ஆஷு மாரசிங்க, இலங்கையின் நீதித்துறை எப்போதும் சுதந்திரமாகவே இயங்கி வருவதாகவும், அரசியல்வாதிகளால் நீதிமன்றங்களின் மீது எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்க முடியாது என்றும் வலியுறுத்தினார்.
அதேவேளை, தவறு செய்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்களுக்குத் தராதரமின்றி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இருக்கும் போதே இது தொடர்பான அறிக்கை ஒன்றை தாம் சமர்ப்பித்திருந்ததாகக் குறிப்பிட்ட அவர், சில நாடுகளில் வழக்குகளை 2 ஆண்டுகளுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்ற காலக்கெடு உள்ளதை நினைவுகூர்ந்தார்.
இலங்கையிலும் அத்தகைய காலக்கெடு முறையொன்றை உருவாக்கி, நீதிமன்றக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும், வழக்குகளை விரைவாக முடிப்பதற்கான உகந்த சூழலை உருவாக்கவும் நீதிபதிகளின் சேவைக்காலத்தை நீடிப்பது மிக அவசியமான ஒன்றாகும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.


