நல்லாட்சி அரசாங்க காலத்தில் ராஜபக்ஷ குடும்பத்தினர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தற்போது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்போது, அதையே ஐக்கிய தேசியக் கட்சி விமர்சித்து அறிக்கை வெளியிடுவது அவர்களின் இரட்டை வேடத்தையும் வெட்கக்கேடான அரசியலையும் வெளிப்படுத்துவதாக ஒருமித்த எதிர்க்கட்சியின் இணை அழைப்பாளர் நிருக்ஷ குமார சாடியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சாகல ரத்நாயக்க மற்றும் தலதா அதுகோரள ஆகியோர் சட்டத்தையும் பொலிஸையும் தம்வசம் வைத்திருந்த நல்லாட்சி காலத்தில், நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
ஆனால், தற்போது அந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைதுகளும் சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் போது, ஐக்கிய தேசியக் கட்சி அதை விமர்சித்து அறிக்கை வெளியிடுவது முற்றிலும் முரண்பாடானது என அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னர் நாட்டின் பிரதான சக்தியாக விளங்கிய ஐக்கிய தேசியக் கட்சி, தற்போது தனது வாக்கு வங்கியினை 2 சதவீதத்திற்கும் குறைவாக இழந்து பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இவ்வாறான கொள்கையற்ற இரட்டை வேட அரசியலாலேயே அக்கட்சி மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துள்ளதாகவும், தற்போது அக்கட்சியில் இருக்கும் எஞ்சிய உறுப்பினர்கள் கூட வீதியில் இறங்கி நடமாட முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
மேலும், ராஜபக்ஷ ஆட்சிக்கெதிராக மக்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடி ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்த போதிலும், அவ்வாறு போராடிய ஆதரவாளர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டைக் சூறையாடிய ஊழல்வாதிகளுடன் கைகோர்த்துச் செயல்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் இத்தகைய நடவடிக்கைகளை ஒருமித்த எதிர்க்கட்சி தொடர்ந்து கண்டிக்கும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.


