மிக் ரக போர் விமானக் கொள்முதல் விவகாரம்: நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆஜர்

0
7

இலங்கை விமானப்படைக்காக உக்ரைன் அரசிடமிருந்து 2006ஆம் ஆண்டு நான்கு ‘மிக்-27’ (MiG-27) போர் விமானங்களைக் கொள்முதல் செய்ததிலும், ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த மேலும் மூன்று மிக் விமானங்களைப் புனரமைப்பு செய்ததிலும் பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் முறைகேடு செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த கொடுக்கல்வாங்கல் இடைத்தரகு நிறுவனம் ஒன்றினூடாக மேற்கொள்ளப்பட்டு நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்ட நிலையில், இது தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கு விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (11) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகியுள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த மிக் போர் விமானக் கொள்முதலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் முறைகேடான கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பில் மேலதிக வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, இன்று முற்பகல் 9.10 மணியளவில் அவர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விரிவான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அன்றைய காலகட்டத்தில் பாதுகாப்புத் துறைப் பொறுப்பில் இருந்த உயர் அதிகாரிகள் மற்றும் விமானப்படைத் தளபதிகளிடம் தொடர்ந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, குறித்த மிக் போர் விமானக் கொள்முதல் விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க நேற்று முற்பகல் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here