30 நாட்களுக்குள் மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பை வெளியிடுமாறு ஜனாதிபதிக்கு சுரேன் ராகவன் கோரிக்கை
மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகள் தற்போதைய சூழலில் பறிக்கப்பட்டு வருவதைத் தடுத்து, மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உப செயலாளரும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் வடமாகாண ஆளுநருமான நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து ஜனாதிபதி மற்றும் ஆளுங்கட்சியின் முக்கிய தலைவரான டில்வின் சில்வா ஆகியோர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் படியே அரசாங்கம் நேர்மையாகச் செயற்பட வேண்டும் என்றும் அவர் இந்நேரத்தில் நினைவூட்டியுள்ளார்.
மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகளைப் பாதுகாத்து, அரசாங்கத் தலைவர்கள் மீதான மக்கள் நம்பகத்தன்மையைத் தக்கவைக்கும் பொருட்டு, வரும் 30 நாட்களுக்குள் மாகாண சபைத் தேர்தல்கள் எப்போது நடத்தப்படும் என்ற உத்தியோகபூர்வ அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட வேண்டும் என்பதே தற்போதைய தங்களது பலமான கோரிக்கையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் தாம் அடுத்தகட்டப் போராட்டங்களில் இறங்குவதற்கு முன்பதாக, கொடுக்கக்கூடிய அனைத்து அரசியல் அழுத்தங்களையும் அரசாங்கத்திற்கு வழங்கத் தயாராக இருப்பதாகவும், இதன் மூலம் அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்த முடியும் என்றும் சுரேன் ராகவன் மேலும் தெரிவித்துள்ளார்.

